நான் என்று
உரத்துச் சொல்வேன்,
ஆணவம் அல்ல,
நானன்றி வேறு யார்,
என்ற நம்பிக்கை!
அதிரும் படி ஓர்
அறைகூவல் விடுப்போம்.
கேடயமின்றி ஓர்
போரினைச் செய்வோம்'!
திறந்த நெஞ்சினில்
பாயட்டும் அம்புகள்
வாங்கிய காயங்கள் தானே
நம் தூண்டுகோல்.
தனித்த தேடலே
வாழ்வின் எரிபொருள்
இனித்த நினைவுகளையே
தேடும் நம் தெரிபொருள்
வென்றே தீருவேன் என்ற
சவால் வேண்டாம்.
உறைந்து நின்றிட மாட்டேன்,
என்ற உறுதி போதும்
தடுத்து நிறுத்தும்
வெற்றிகள் வேண்டாம்
அடுத்ததை முயலச் செய்யும்
தோல்விகள் போதும்
கேலிகள் சூழும்,
சோர்ந்து விடாதே!
கேள்விகள் தொடர்ந்து
கேட்கிறாய் என்றால்
கேலிகள் சூழும்
சோர்ந்து விடாதே!
நினைவில் கொள்!
பிறர் நினைக்க கூட
இயலாதவற்றை நீ
செய்து கொண்டிருக்கிறாய்!
அதனாலே நீ
கேலிகள் கேட்கிறாய்!
எதிரிக்கும் எதிரி அன்று!
அவனுக்கும் உந்துசக்தி நீ!
வீழா நிற்பவன் நீயன்று!
விழுந்தாலும் எழுந்து நிற்பவன் நீ!
தொடர்ந்து முயல்வாய் !
நினைத்ததை அடைவாய்!
அன்புடன்,
மணி கண்ணன்
click here to subscribe...
コメント