ஏதும் இங்கே குறையில்லை
சிறைகளை சிறகில் ஏந்துவாய்
ஏதும் இங்கே தூரமில்லை
பாதங்களால் இப்பூமி அளப்பாய்.
தொலைநோக்கி பார்த்திடு
இமயமும் உன் இமைகளுக்குள்.
நீ தூண்டில் இடுவாய்
துருவங்கள் வரையிலும்.
கூண்டு குறை என்றால்
கூண்டோடு பறந்திடு.
குறைகள் மறந்திட வேண்டி
உன் தனித்துவம் அறிந்திடு.
பேரம் குறையல்ல தெருவோர வியாபாரிக்கு.
தூரம் குறையல்ல விண்வெளி வீரனுக்கு.
பாரம் குறையல்ல பளுதூக்கும் தோழர்க்கு.
நேரம் குறையல்ல அவசர ஊர்திக்கு.
சிலர் வீட்டு கூரை மேலிங்கே
ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன.
சிலர் வீட்டு கூரை மேலிங்கே
மேகங்கள் விரிந்திருக்கின்றன.
உணவில் சுவையை தேடும் பலர்,
உணவைத் தேடும் சிலர்.
நாம் கொடுப்போம் என்பதாலேயே
அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை
கடவுளையும் மிஞ்சுமளவில் கொடையளி
உன் மூலம் வெளிப்படுவதையே அவர் விரும்புவார்.
என்றென்றும் என்று ஏதுமில்லை
யான் எனதென்றும் ஏதுமில்லை
யாவும் நமதாய் ஆகட்டும்
ஏதும் குறைவில்லை, குறையுமில்லை
சிகரம் நோக்கி செல்கையில் சிகரம் அழகு
சென்றடைந்த பின் வந்த பாதை அழகு.
குறைகள் நிறைகளாகும்,
நிறைகள் குறைகளாகும்,
காலத்தின் கட்டளைகளால்!
யார் பார்வையிலும் படாவிடிலும்
காற்றுக்கு குறையில்லை.
கற்பனைக்கு எட்டா தூரமானாலும்
விண்மீனுக்கு குறையில்லை.
மின்மினி, நிலவை எண்ணி
குற்றம் சாற்றிடவில்லை ஒருபோதும்.
நிலவின் ஒளி செல்லமுடியா
இடங்களை ஒளியூட்டி தன்
தனித்துவம் காத்திடும்.
ஏதுமில்லை அவர்கட்கு
என்று நாம் சொல்பவர்களுக்கு
மட்டுமே தெரியும் அவர்கள்
எதில் செல்வந்தர் என்று!
கொண்டோம் யாவும் நிறையாக
இழந்தோம் சில குறையாக
பெற்றிலோம் சில நிறைவாக
மற்றவற்றை அவை குறைக்கக்
கூடும் என்பதாலேயே!
நிறங்கள் வேறுபட்டால் குறையில்லை
நாம் நிறைந்தோம் ஏனோ இத்தனை குறைகள்.
வேறுவேறு நிறங்கள் என்ற வேறுபாடின்றி
ஒன்றுபட்டு உடன் நின்றால்
நிறமாலை சூட்டலாம் பூமி அவளுக்கு.
Love,
Mani kannan
Click here to subscribe..
Click here to suggest a topic/situation to write about...
Thanks bro
Super bro, keep it up..