top of page
Writer's pictureMani Kannan

#T49.மேகமலை(மலையான மேகம்)


நீண்ட நாள் எதிர்பார்த்த தனிமைப் பயணம் அது, மேகமலையை நோக்கி ஒரு பயணம் தனியாக, எனக்காக, என் கனவிற்காக, என்னைத் தேடி மட்டுமன்று, நான் என்ன தேட வேண்டும் என்றும் அறிந்திட. 2020-ல் செய்திட வேண்டி நான் வரிந்து கட்டி நிற்கும் செயல்களில் சில தனிமைப் பயணங்களும் அடக்கம்.


எந்த நிலையிலும் இதை நினைத்து பதட்டப் படுதல் கூடாது எனக்கு நானே சொல்லிக் கொண்ட சில விஷயங்கள்.


  • செல்கின்ற பயணத்தின் வெற்றி/தோல்வி.

  • எதிர்பாராமல் பயணங்கள் நீளுதல்.

  • பயணத் திட்டங்களின் தோல்வி.


அனைத்து விதத்திலும் நான் தயார் என உணர்ந்த மறு நொடியில் மேகமலை செல்ல தீர்மானித்தேன். மேகமலை செல்லும் பேருந்து புறப்படும் இடமான சின்னமனூர் சென்றடையவே ஒன்பது மணி நேரங்கள் ஆயின. சோர்வின் சுகம் உணர்ந்தேன் முதல் முறையாக என் வாழ்வில். ஆக தயாராகும் முன்னர் எனக்கு நானே பதட்டப் பட வேண்டாம் என்று கூறிக் கொண்ட அத்தனை நிகழ்வுகளும் அரங்கேறின. என்ன ஒரு ஆனந்தம்! மறுநாள் காலை மேகமலை நோக்கி செல்லப் போகின்ற களிப்பில். முதல் முறையாக களைப்பின் ளை-இல் இருந்த 'ஐ' மருவி 'இ' ஆனது!




என்னோடு மலைப் பயணம் வந்த சில நண்பர்கள் அவர்கள் என் பயணத்தை மேலும் அழகாக்கினார்கள்! இதோ அவர்களைப் பற்றி,


  • கரை வந்த பிறகே : 96

  • கோடி அருவி கொட்டுதே : மெஹந்தி சர்கஸ்

  • உனக்கென இருப்பேன் : காதல்

  • மூங்கில் காடுகளே : சாமுராய்

  • மூங்கில் தோட்டம் : கடல்


பயணத்தில் முன்னர், பயணத்தின் போது, பயணத்தின் பின்னர்


என்னுள் எழுந்த சில வரிகள்



பேருந்தின் உள்ளே காத்திருந்த போதே

மலைகளை மனதில் வரைந்தேன்.


மலையில் ஏற ஏற என் மனம்

ஜன்னல் வழி பறந்திடக் கண்டேன்.


கொண்டை ஊசி வளைவுகள் கடந்திட

என் பாதை நேராகியது.


மூங்கில் தோட்டம் மாறி இங்கே

தேயிலை தோட்டம் எனை ஈர்த்தது.


மலையின் அழகை நேரலை

செய்யும் பணியை செவ்வனே

செய்தன தேயிலைத் தோட்டங்கள்.


நான் மேகமலை அடைந்த வேளையில்

மேகமும் மலையை அடைந்திருந்தது.


ஆரத் தழுவிக் கொண்டிருந்தது,

இது தன் மலை என்னும் பெருமிதத்தில்.


தேனியில் இருக்கும் நான்

இங்கு காண்கின்ற பூக்கள் நோக்கி

தேனியாய் பறந்திட விழைகிறேன்.


எங்கும் எனைக் காண்கிறேன்.

இங்கே நீரோடை என் கண்ணாடியாக,


எப்போதும் நான் என்னோடு

கலந்து உரையாடுகிறேன்.

இங்கே அத்துணை அமைதி!


தன் வழி தேடி ஆனந்தமாய் செல்லும்

நீர் போலே என் வழி தேடி ஓடிட முயல்கிறேன்.


காற்றோடு ஒரு துகளாய் மாறி

இந்த மலையெங்கும் சுற்றிட ஏங்குகிறேன்.


இங்கே மெய் சிலிர்த்த போதிலும்

மனம் மட்டும் ஏனோ வெகுண்டு எழுகிறது!


இறுதியாய் உச்சியை அடைந்தேன்

அவ்வூரின் பெயர் இறைவன் கல்லுரு.

இறக்கைகள் பெற்றதைப் போலே

கண்கள் பறந்து சென்று ரசிக்கிறது,

சுற்றும் முற்றும் எத்திசை பார்ப்பினும்

மலைகள், அதற்கு அழகு சேர்க்கும்

தாழ்வான மேகக் கூட்டங்கள்.

மலையின் பாதங்களை அலங்கரித்த படி

பச்சை மேகம் போல தேயிலைத் தோட்டங்கள்.

இப்போது புரிகிறது ஏன் இது

இறைவன் கல்லுரு என்று.


நல்லபடி திரும்பி வந்தால் போதும்

என்று வேண்டிக் கொண்டு சென்ற நான்,

இறைவா! இன்னொரு ஜென்மம் எனக்கு

அருள்வாயானால் இங்கே எனை ஒரு

புள்ளினமாய் படைத்து விடு!

புற்கள் மீதிலே தூங்கிடுவேன்.

என்ற கோரிக்கையுடன் திரும்பினேன்.


பயணங்கள் விரதங்கள் போன்றது

எனினும் அதன் அனுபவங்கள்

மதுரமாய் என்றென்றும் இருக்கும்.


ஏழையாய் ஏன் இத்தனை நாள்

என்ற கேள்விக்கு விடைகள் கண்டேன்

இயற்கையின் கொடையை எற்காதவர்களே ஏழைகள்!

ஆம்! இயற்கையின் கொடையை எற்காதவர்களே ஏழைகள்!



Love,


Mani kannan


Click here to subscribe..


Click here to suggest a topic/situation to write about...

78 views1 comment

Recent Posts

See All

1件のコメント


Eswar Ramesh
Eswar Ramesh
2020年2月06日

Suprb da...

いいね!
bottom of page