top of page
Writer's pictureMani Kannan

#T48.வருடும் வருடம்!

Updated: Jan 3, 2020

வருகின்ற வருடம் கலாபம் கொண்டு வருடும்,

செதுக்கிட வேண்டியே உன்னில் கொஞ்சம் திருடும்,

சிறகுகள் வலி உணரும் பறந்திட முயல்கையில்.

கிளைகள் கண்டால் இளைப்பாறல் வேண்டாம்.

இளைப்பு கொண்டால் கிளைகள் தேடுவோம்.


சிந்தி கிடக்கும் அழகு செல்லும் வழிகளில்

அள்ளிப் பருகுவோம் அன்றாடம்.

அந்தி சூரியனின் இளஞ்சிவப்பு அழகில்

நம் உள்ளங்கள் தூய்மை ஆகட்டும்.


அறுவடை செய்யும் வரையிலும்

காற்றோடு காதல் பாடும் பயிரைக் காணலாம்.

எழுத்துக்கள் அறியா குயில்களின்

ஓசையில் அளபெடையைக் கேட்கலாம்.


காளான்களை வீடாக்கும் சில உயிர்கள் உண்டு,

மேம்பாலமதை மேற்கூரையாக்கும் சில உயிர்கள் உண்டு.

இவை எல்லாவற்றிற்குமாய் வாழ முயலுங்கள்.

உங்களுக்காக ஓடுங்கள், உங்களை விட்டு ஓடி விடாதீர்கள்.


நதிதனைக் காண்கையில் துளியாய் மாறி

அதனில் கலந்து கற்பனையில் ஓடிப் பாருங்கள்.

சில நேரங்களில் தூரங்கள் அழகு

சிகரம் போல, வானம் போல.

வானம் கைக்கு எட்டினாலும் அழகில்லை

உச்சி சென்று விடின் சிகரமும் அழகில்லை.


நீங்கள் நல்ல சொற்களை விதையுங்கள்

வறண்ட மனங்களும் அறுவடை காணும்.

நல்ல விதமாய் நடந்து காட்டுங்கள்

மாற்றத்தை அது விளம்பரப் படுத்தும்.


வாருங்கள் வானவில் அருந்தலாம்

வண்ணங்கள் குழைத்து பூசியே

நம் வெள்ளை மனம் திறக்கலாம்!

மழைத்துளி பருகியே மனதின்

தாகம் தணித்திட முயலுவோம்


கண்ணீரில் தான் நாம் இங்கே

இதயங்கள் தூய்மை செய்திட இயலும்

வரும் வருட நாட்காட்டி நாம்

வாழ்ந்த நாட்களை கண்டபடியே

திருப்தியுடன் கிழியட்டும்!


Love,


Mani kannan

Click here to subscribe..

Click here to suggest a topic/situation to write about...

41 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page