வலிகள் தொலைத்தால்
வழிகள் தொலைப்பாய்
கலங்கிடாதே!
வலிகள் வழி காட்டும்
வலியைக் கொல்லாதே
அது உன்னைக் கொல்லும்!
வலிகளால் நீ ஜொலிப்பாய்
வலியிடம் நட்பு கொண்டால்!
வலியின் குரல் அடக்கிடு,
உந்தன் ஓசை கேட்கும்!
துரும்பளவு தேய்ந்தாயானால்
தூணாய் வளர்வாய் துயருறாதே!
நிச்சயமில்லாத வாழ்வு இங்கே
நிகழ்வுகளை நினைவில் நிறுத்தாதே!
மலையெனத் தெரியும் கஷ்டங்கள்
தள்ளி நில்! கடுகாய்த் தெரியும்!
வலிகள் யாவும் உளிகளே!
காயங்கள் யாவும் ஆபரணங்களே!
மாய்வது நன்றெனத்
தோன்றிட வைக்கும்
தருணங்கள் யாவும்
வருங்காலத்தில்
மலர் இதழாய்த் தெரியும்!
பொதுநலம் பாதிக்காத
சுயநலமும் பொதுநலமே!
பிறர் திரவியம் திருடா
நல்மனமும் கொடையுள்ளமே
எவர்நலமும் அழிக்காத
சுயநலம் கொள்!
தேடும் கடவுளை
உன்னில் கண்டுகொள்!
யாவரும் கடவுளே
பிறர் புன்னகைக்கு
நீரூற்றுகையில்!
கடவுளைக் கண்டிட
ஏன் ஆவல் கொள்கிறாய்?
கடவுளாய் நீ மாறிடும்
வாய்ப்பிருக்கையில்!
Love,
Click here to subscribe..
Click here to suggest a topic/situation to write about...
Comments