top of page

#t47.இடைவேளை!


ஏதோ ஒன்றை தொலைத்த உணர்வு

ஏனோ இனிமையில்லா கனவு

என் கலைகளில் கதிர்களில்லை

என் மாலைகளில் மையலில்லை.


திரவியங்கள் சூழ இருந்தும்

சுவாசத்தில் வாசம் இல்லை

விருந்துகளில் கலந்து கொள்கையிலும்

ஏனோ பசி இல்லை.


மெய்க்கு நிகராய் உயிரில்லை

உயிர்க்கு துணையாய் மெய் இல்லை

தூறல் சாளரம் வந்தும் நனையவில்லை

தேநீர்க்கு துணையாய் கவிதைகளில்லை.


நீரற்ற நிலம் ஜலதோஷம் கொண்டதை

விசாரிக்க நேரமில்லை.

மழைச்சட்டை துறந்து மழையை

சட்டையாக்க மனதில்லை.


ஆழ வேண்டிய நான் மிதக்க கூட இல்லை

கரைதனில் நின்று காலம் பார்க்கிறேன்

எங்கும் செல்ல வில்லை,

இங்கே சில காலம் இல்லாது போனால்

எப்படி இருக்கும் என்று உணர்ந்திட

அசை கொண்டேன்.


வரும் வழியில் அழகாய் ஏதுமில்லை

நாளை முதல் எதிலும் ஓர் அழகிருக்கும்.


எழுத்தற்ற இந்த சில காலம்

கனமழை வருமென நம்பி

வீட்டினுள் அடைபட்டுக் கொண்டு

காற்றோடு காற்றாய் வந்த

சாரலை சுவாசிக்க தவறிய காலம்.


இனியிங்கே கனவுகள் தூக்கம் தரும்

விடியல்கள் வெளிச்சம் கொண்டு வரும்.



Love,


Mani kannan


Click here to subscribe..


Click here to suggest a topic/situation to write about...

Comments


bottom of page