top of page
Writer's pictureMani Kannan

#T4.யாய்



வணக்கம் நண்பர்களே..,

பல நாள் முயற்சி செய்து இன்று இதை நான் பதிவேற்றியதில் யான் பெற்ற இன்பத்தை அளவிட இயலவில்லை .ஆம் இன்று அம்மாவைப் பற்றி என்னுள் கருவாக்கி நான் ஈன்றெடுத்த எண்ணங்களை பகிர்ந்திருக்கிறேன்.இதைப் படிக்கையில்,கடக்கின்ற ஒவ்வொரு வரிகளிலும் உங்கள் அன்னையுடனான ஒவ்வொரு படிநிலைகளும் உங்கள் மனத்திரையில் உங்களுக்காக மட்டுமே ஒளிபரப்பப் படும் என்று நம்புகிறேன்.

என் உதயத்தை கொண்டாடியதில்லை

நான் வாழ என் வாழ்வைக் கொண்டாடினாய்.

என் கைகள் பற்றி நீ எழுதியதில்லை

என்கை எழுத்துக்கள் உன் கைத்தட்டல் பெறாமல் இருந்ததில்லை.

வழிபாட்டு அறைப் பக்கம் பலமுறை செல்வேனானாலும்

தரிசனம் கண்டது ஏனோ சமயலறையில் தான்.

பாதைகளை அவள் சுட்டிக் காட்டியதில்லை

நான் செல்லும் பாதைகளில் உடனிருக்கத் தவறியதில்லை.

நான் வளர வேலியாய் நின்றதில்லை

வேலிகள் தகர்த்து வெளியுலகம் காட்டத் தவறியதில்லை.

உன் கைகள் கோர்த்து பள்ளி சென்றதில்லை

ஆனாலும் வாழ்வில் முதுநிலைப் பெறவைத்தாய்.

என் பிஞ்சுமொழி கேட்டு கொஞ்சியதில்லை.

என் முதிர்மொழி கேட்டு மெச்சிக்கொண்டாய்.

கடவுளோடு கோவில் சென்ற தருணங்கள், அதுவே

யாரை வணங்குவது என்று குழம்பிய தருணங்கள்.

தாயோடு தந்தை ஆனாய்.

தோள் தட்டும் தோழன் ஆனாய்.

அவ்வியம் களைய வைத்தாய், என் வாழ்க்கை

வில்லுக்கு உன் வாழ்வை அம்பாகத் தந்தாய்.

ஒற்றை வண்ண வானவில் உன் சேலை.

அதுவே அன்பை உற்பத்தி செய்யும் ஆலை.

என் போராட்டக்களத்தில் கேடயம் அல்ல நீ

என் போராட்டத்தின் உத்வேகம் நீ

ஆயிரம் பேர் கலகத்தை உருவாக்கினாலும்

ஒற்றை விளக்காய் வழிகாட்டும் உன் வார்த்தைகள்

நிற்றல் அரிதென்று அஞ்சிய வேளைகளில்

என் கால்களின் பலம் உணர வைத்தாய்.

என் பயிற்சிகளில் சுமையாய் வந்தாய்

என் வெற்றிகளின் கோப்பையாய் நிமிர்ந்தாய்.

எண்ணங்களே என் வலிமை என்றாய்.

எண்ணித் துணிக என்பதை துணிந்து எண்ணுக என்றாய்.

ஆலோசனைகள் அணு அளவும் தந்ததில்லை

அனுபவங்களை அள்ளித் தந்தாய்.

சேர்ந்திருத்தல் அவசியம் என்றாய்

சார்ந்திருத்தல் கூடாது என்றாய்.

மானுடப்பிறப்பு யாரால் என அறியேன்

மனிதம் கற்றது உன்னால் என உரைப்பேன்.

முடிவில்லா பந்தம்...

முடித்திட மனதில்லை..

முடிவின்றி முடிக்கிறேன்.

love

Mani kannan

Click here to subscribe..


12 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page