top of page

#T30.ஆடையற்ற மனது!

Writer's picture: Mani KannanMani Kannan

அறை குறை ஆடை காரணமா?

இல்லை கயவர்தம்

ஆடையற்ற மனம் காரணமா?

வீதிக்கு வருவது காரணமா?

இல்லை விழிகளால்

மேய்ப்பவன் காரணமா?


அணிவது எங்கனம்-

போதனைகள் வேண்டாம்!

பார்ப்பது எங்கனம்-

புகுத்திடல் வேண்டும்!


அலர்கின்ற மலர்கள்

விரிந்திடும் முன்னரே

வக்கிரம் கொண்ட வண்டுகள்

நுகர்தலில் உலரலாகுமோ?


துளிர் விட்ட செடிகள்

கதிரவன் காணும் முன்னே

மிதித்திட்ட கயவர்களால்

சரிந்து போனதேனோ?


பெண் பொம்மைகளைக் கூட

பேழைக்குள் வையுங்கள்

இந்த பரதேசிகள் பருந்துகட்கு

இரையாகும் வரை!


பெண்களை விழிப்போடு

இருந்திட பணியாதீர் !

ஆணினத்தை உணர்வுகளை

விழிப்புடன் வைக்கப் பணியுங்கள்.


பெண் என்றால் இங்கே ஓர்

இலக்கணம் உண்டு

ஆண் என்றால் இங்கே ஓர்

தலைக்கனம் உண்டு.

நேரமிது இவை ரெண்டும்

இடம் மாறிட!


பெண்மை அழகென்றால்

போற்றப்பட்ட பெண்மை

பேரழகாகும்!


மாதவம் செய்திட்ட மங்கையர்

தாண்டவம் ஆடிடும் நாள் வரும்.

சேவிதம் செய்திட்ட பெண்கள்

ஆயுதம் ஏந்திடும் நாள் வரும்.


சாமரம் வீசிய பெண்கள்

கோபுரமாய் உயரும் நாள் வரும்.

அறைக்குள் அடைப் பட்டவள்

மேகத்தை சிறைபிடிப்பாள்.


ஜனனம் எடுப்பாள் இங்கே

இன்னொரு ஜான்சி ராணி,

புன்னகைததே போர் புரிவாள்

மின்னலென மாறி

கண்கள் கொய்வாள்.

நரைத்த கிழவனே ஆயினும்

நரபலி கொடுப்பாள்!


வாரணம் ஆயிரம் சூழ வந்தவள்

வாரணமாய் வருவாள்,

மதம் கொண்ட மனிதர்களை

வதம் செய்து போவாள்!


வெளிவந்த ஒற்றைச் சோறு

பானைச் சோற்றை

தீர்மானித்தல் ஆகுமோ?


பானைச் சோறாய்,


மணி கண்ணன்.


click here to subscribe...


Cover Photo : by Artem Beliaikin @belart84 from Pexels

45 views0 comments

Recent Posts

See All

Opmerkingen


bottom of page