வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை பாலைவனத்தில் வாழ்ந்து தொலைத்தேன்..இரண்டாவது பாதியில் அடி வைத்த காலம் அது..ஆம் அன்று நான் அறியவில்லை வாழ்க்கையில் இது போன்ற இறந்த காலத்தை அதிகம் நான் உபயோகிக்க வேண்டி வருமென்று..
கனவுகளாலேயே கண்கள் தூக்கத்தை தொலைத்த காலம்..ஏதாவது வாழ்வில் செய்திட வேண்டும் வென்றிட வேண்டும் என்ற வேட்கை.இது ஒருபுறம் என்னவள் என்ற எண்ணம் விதைத்த யாரையும் யான் கண்டிலேன் அதுநாள் வரையில்..
எதிர்காலம் கற்றேன் யாரென்ற எதிர்பார்ப்பில்
நிகழ்காலம் கற்றேன் உடனிருந்த நாட்களில்
இறந்த காலம் கற்கிறேன் அதிலேயே வாழ்வதால்..
தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று சொன்னார்கள் அன்று..அந்த தீண்டாமையின் இடத்தை மாற்றீடு செய்த இரு விஷயங்கள்
திருமண மோதிரமற்ற பெண்ணின் விரல்
கையெழுத்து அதிகாரமற்ற ஆணின் விரல்
என் விரல் சிக்கிய பேனா ஒரு சக்தியாக மாற வேண்டி அலைந்து திரிந்த நாட்கள்..வாழ்க்கை எளிதென்று எண்ணி என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்த நாட்கள்..வழக்கமாக சென்று கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்பார்க்க்வில்லை அவள் உருவில் கயிறொன்றைக் காலம் வீசும் என் நாட்களைக் கட்டிப் போட என்று...ஆம் நீங்கள் எதிர்பார்ப்பதைபோல் தான்.கண்டேன் அவளை..
அவள் தரிசனம் கண்ட வேளை முதல் என் மதமாகிப் போனாள்..
என் அன்றாடம் புனிதமானது.அவளைப் பின்தொடர்ந்த என் பயணம் யாத்திரையானது.வாழ்க்கை விழாவாக,அடியேன் கொண்டாடலானேன்.
என்னடா வாழ்க்கை என்று பலமுறை உளறிய என் உளறல் கேட்டுக் கேட்டு கடுப்பாகி போனக் கடவுள் நான் கொண்ட வரையறைகள் அனைத்தையும் மூட்டையாகக் கட்டி தூக்கி வீசிய வரம் அவள்.அழகு என்ற ஒன்று தீர்ந்து போயின் என்ன செய்வது என்பதற்காக வைக்கப்பட்ட இருப்பு அவள்.
முதல் முறை அவளைப் பார்த்த அந்த அனுபவம் தூவிச் சென்றது
ஓராயிரம் முறைகள் பார்க்க வேண்டும் என்ற விதைகளை.
அவளைப் பார்க்கின்ற ஒவ்வொரு முறையும் ஓசைவராமல் பாடிக்கொள்வேன்,அசைவில்லாமல் ஆடிக் கொள்வேன்,இருந்த படியே இன்பச் சுற்றுலா சென்று வருவேன்.இவை நான் மட்டுமே உணர்ந்த மாற்றங்கள்.இன்று வரை விவரிக்க முடியாத மாற்றமாக அது தொடர்கிறது.நாட்கள் செல்லுகையில் அவ்வப்போது தென்பட்ட அவள் உருவம் அடிக்கடி வேண்டும் என்ற கோரிக்கைகளை என்னிடம் நானே வைத்துக் கொண்டேன்.அரை நாள் நோயாக அல்ல,ஆட்கொல்லி நோயாக அவள் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
அவள் தூவிச் சென்ற எண்ணங்கள்,என்னை அவளிடம் அறிமுகம் செய்திட மன்றாடின.தவிர்க்க முடியாத நானோ கூகுளை விடவும் அதிசிறந்த தேடல் கருவியை உருவெடுத்தேன்.முடிவில் கண்டும் பிடித்து விட்டேன்.பேச வேண்டும் என்ற எண்ணங்கள் என்னை மேலும் வளப்படுத்திவிட்டன தூங்கா போராட்டம் செய்த என்னிரு விழிகள்.இறுதியில் ஒரு நாளும் மறுநாளும் சந்தித்துக் கொள்ளும் வேளையில் அனுப்பி விட்டேன் என் பெரும் ஆசைகளை ஒரு குறுஞ்செய்தியாக.
என் முதல் செய்தி “எது இந்த Hii சொல்ல வைத்தோ,அறியேன்!”
எந்த நிச்சயமும் இல்லாத பதிலுக்காக, தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்த என் விழிகள்.மறுநாள் இரவில் நான் பெற்ற பதில்..
“எது இந்த Hii சொல்ல வைத்தோ,அறியேன்!”
இந்த மறுவுரையைப் பார்த்ததும் என்னுடைய நகலுக்கு சேலை கட்டி விடப் பட்டவள் போலும் என்பது போல உணர்ந்தேன்...மிதந்தேன்..பறந்தேன் உலகில் உள்ள அனைத்து பறவைகளின் சிறகுகளையும் பறித்து என் மீது கட்டி விட்டவனாய்.எது நாள் வரையில் என்ற கவலை இல்லை தொடர்ந்தேன் இந்த நாளுலாவை.
மிதமாக,இந்த செய்திகள் முயக்கமாக மாறின.நான் என்னைப்பற்றி ஏதும் மறைத்திடவில்லை.எனினும் அவள் பெயர் தவிர ஏதும் உரைத்திடவில்லை.இருப்பினும் நானே எனக்களித்த வரமாக அவள் என்னவள் என்று கொண்டேன்.புதுப்புது அர்த்தங்கள் பெற்றன வார்த்தைகள் அவள் உரைக்கையில்.அவள் குரல் கேட்டிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இடைவிடாது ஒலிக்கலானது.அனால் அவள் அதை கேட்டிருப்பாள் போலும்.ஆம் அதே கேள்வி அவளிடமிருந்து,நான் எப்போதாவது அவள் குரலை கேட்டுள்ளேனா என்று.இல்லை அடுத்த முறை கேட்கையில் ஆம் என்று சொல்ல விருப்பம் என்றேன்.அவள் குரல் கேட்ட மறுகணம் மீண்டும் இதே கேள்வியை கேட்பாயானால் இல்லை என்று சொல்ல விருப்பம்..மன்னிக்கவும் என்றேன்.
நாட்கள் நகர்ந்தன..என்னுள் எழுந்த உணர்வுகளை விவரிக்க தொடங்கினேன்.எனினும் அவள் பெயர் தவிர வேறு விவரம் அறிந்திலன்.அவள் நினைவுகள் சுமந்து வரும் பாடல்கள் கேளாமல் என் நாட்கள் முற்றுப்பெறவில்லை.
இன்னும் தொடர விரும்புகிறேன்.ஆனால் முடித்திட இன்னும் அதிகமாக விரும்புகிறேன்.எப்படி நிறைவு செய்ய? அறிகிலேன்.அவள் நினைவுகளோடு தொடர்கின்றன போரட்டங்கள்.நானும் வென்ற பாடில்லை.வென்று விட்டால் போராட்டம் முடிந்திடுமே....
click here to subscribe..
Love
Mani kannan
Comentários