top of page

#T28.வானவில் குடித்தவள்!

Writer's picture: Mani KannanMani Kannan

வானவில் குடித்தவள்

வண்ணங்கள் மறக்கிறாள்

நிறமாலை அணிந்தவள்

நிறங்களை வெறுக்கிறாள்


கீர்த்தனைகள் பாடியவள்

மௌனமாய் பேசுகிறாள்

மழையாய் வார்த்தைகள் பொழிந்தவள்

மழலையாய் பிழைகள் பொழிகிறாள்.


தன்னம்பிக்கை தாகமற்றவள்

தன் நம்பிக்கை தேடுகிறாள்

இடியென இடித்தவள்

இடிபாடுகளில் சிக்குண்டவளானாள்.


அருவியென பாய்ந்தவள்

குவளைக்குள் தவிக்கிறாள்.

புரையென ஓடியவள்

கரை காண தவிக்கிறாள்


எல்கையன்றி திரிந்தவள்

சிறைவாசம் நுகர்கிறாள்

ரக்கையின்றி பறந்தவள்

உள்ளங்கை நீராகிறாள்


பயணிப்பதில் சாலச் சிறந்தவள்

வரைபடம் தொலைத்து நிற்கிறாள்

திரைகடல் ஓடியவள்

திரையின் பின்னே மறைகிறாள்.


குறைகள் யாவும்

குறைவின்றி இருக்க,

பெரிதல்ல வாழ்க்கை என்றே

பற்றற்று இருந்தவள் இன்று

நரை பெரிதன்று என

போர்க்களம் போகிறாள்.


மாறும் என எதிர்பார்த்து நின்றவள்

எதிர்த்து மாற்றச் செல்கிறாள்.

அனைத்தையும் இழந்தேன்

என்று கலங்கி நின்றவள்,

இழப்பதற்கு ஏதுமில்லையென

இலகுவாய் போகிறாள்!

அகழ்வாரைத் தாங்கியவள்

திகழ்வாள் தீபமாக!


love,


Mani Kannan


Click here to subscribe...

Comments


bottom of page