மரபணு மாற்றப்பட்டு விட்டோம் போலும்!
மிருக குணத்தில் மனித உடல் கொண்டோம்!
மனிதனால் இயலாது ஒன்று உண்டேயானால்
அது மனிதனாய் வாழ்வதே ஆகும்.
எச்சரிக்கை! இது மனிதர்கள் வாழும் பகுதி!
வனம் செய்கிறோம் நாம், காற்றில்
மகரந்த மணம் இல்லாமல் செய்கிறோம்
வனவிலங்குகளுக்கு வனம் தான் சரணாலயமோ?
அவைகளுக்கும் சொல்லப்பட வேண்டுமோ? எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் பகுதியென!
எல்லைகள் தோறும் படைகள்
நம்மிடம் இருந்து நம்மை காக்க!
சக மனித வாழ்வை சகிக்க முடியாவிடில்
சற்றும் சதையின்றி சிதைந்து போய்விடுங்கள்
உங்கள் குருதி இந்த மண்ணில் மாசாக வேண்டாம்!
எச்சரிக்கை! இது மனிதர்கள் வாழும் பகுதி!
ஆயுதம் ஏந்தி காவல் செய்கிறோம்!
எல்லைக்கு அப்பால் இருப்பது
என்னவோ நம் இனம் தான்!
காத்துக் கொள்வதிலே நம் வாழ்க்கை
முடியுமானால் வாழ்வது எப்போது?
இங்கு வீழ்ந்த தோட்டாக்களும் குண்டுகளும்
முளைக்குமானால் இன்று மாக்களை விட
மரங்கள் நிறைந்திருக்கும்!
இங்கு இருக்கும் துப்பாக்கிகள் கொண்டு
ஆயிரம் பாலங்கள் செய்யுங்கள்!
இங்கு இருக்கும் பீரங்கிகளை
பறவைகள் வீடாக்குங்கள்!
புள்ளினங்கள் பறக்கட்டும் இப்புவியில்!
புற்களின் வாசமும் வீசட்டும்!
உன் நாடு என் நாடு எல்லாம்
நம் உலகம் என்றாகும் ஒருநாள்!
அந்நாள் வரையில் எச்சரிக்கை !
இது மனிதர்கள் வாழும் பகுதி!
மணி கண்ணன்
click here to subscribe
Comments